தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் : குழுத் தலைவர் பேட்டி


அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக புதிய பாடத்திட்ட குழுத்தலைவர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக அமையும் என்றும் அனந்த கிருஷ்ணன் கூறினார். தற்போதைய பள்ளிக்கல்வியின் நிலைமையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தார். இந்த மாற்றங்களை எப்படி செய்வது, எந்த குறிக்கோளை எட்டும்படி செய்வது என்பது பற்றி நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. CBSE பாடத்திட்டத்தை விட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறினார். புதிய பாடத்திட்டத்தை அமைக்கும் போது அதற்கேற்ற ஆசிரியர்கள் பயிற்சி, மாணவர்களின் திறமைகளை கணக்கிட கூடிய வழிமுறைகள், கட்டுமான வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் இவையெல்லாம் ஒன்றாக சேர்த்து செய்தால் மட்டுமே அது முழுமை பெறும் என்றார். அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தரான அனந்தகிருஷ்ணனை, புதிய பாடத்திட்டத்தை வகுப்பதற்கான குழுவின் தலைவராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடமும் புதிய பாடத்திட்டம் அமைப்பது பற்றிய கருத்துக்கை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.