மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது


மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது | மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள்ஒதுக்கீடு செய்து கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14-ந் தேதி தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர், தமிழக அரசின் அரசாணை அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்றும், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும் கூறி ஜூலை 31-ந் தேதி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, .எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, கிரி, கே.விஜயகுமார் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- நீட் தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்காக வகுக்கப்பட்டது. மாநில பாடதிட்டம், சி.பி.எஸ்.. பாடதிட்டம் என்று மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டமுடியாது. மாணவர்கள் சேர்க்கையில் பாட திட்டங்களின் அடிப்படையில் இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அனுமதிக்க முடியாது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ள போது, மாநில அரசு இப்படி தனியாக வேறொரு வழிமுறையை முயற்சிப்பது சரியல்ல. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர். DOWNLOAD