புத்தக சுமையை குறைக்க விரைவில் புதிய திட்டம்


புத்தக சுமையை குறைக்க விரைவில் புதிய திட்டம் | பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைத்து மகிழ்ச்சியைப் பெருக்குவதே கல்வித் துறையின் அடுத்த திட்டமாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.உதயச்சந்திரன் தெரிவித்தார். மயிலாப்பூர் சாவித்ரி அம்மாள் கீழ்த்திசை (ஓரியண்டல்) மேல்நிலைப் பள்ளியில் "இந்த நாள் இனிய நாள் - பள்ளிக்கு செல்லும் முதல்நாள்" என்ற விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் கூறியதாவது: கல்வித்துறையில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள்தான் புத்தாண்டு. அதை இப்பள்ளி மாணவர்களோடு கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி. கல்வித்துறையில் இன்னமும் நிறைய செய்யவிருக்கிறோம். அதுகுறித்து தொடர்ந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கொண்டு வரும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் அனைத்துக்கும் அடிநாதமாக ஒரு மையப் புள்ளியாக இருப்பது பள்ளிகளில் குழந்தைகளை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது மட்டும்தான். காலையில் பள்ளிக்கு வரும்போது குழந்தைகளின் முகம் எப்படி இருக்கின்றது? பள்ளி முடிந்த பிறகு எப்படி இருக்கிறது? என்பதை பார்க்க விரும்புகிறோம். இன்று ஐந்தாம் வகுப்பு பயிலும் எனது மகளை பள்ளிக்குக் அழைத்துச் சென்று விடும்போது, அவள் தூக்கிச் சென்ற பையின் கனம் எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. குழந்தைகளுடைய புத்தகப் பையின் கனத்தைக் குறைப்பதுதான் அடுத்த வேலையாக இருக்கும். புத்தகங்களில் பக்கங்களைக் குறைப்பது அல்லது புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும், டேப்லெட் என்ற புதிய சாதனங்களைக் கொண்டு பயிற்றுவிப்பது குறித்தும் ஆலோசிப்போம். ஒவ்வொரு மாணவருக்கும் ஏதேனும் தனித்திறமை இருக்கும். அவர்களுக்குப் பிடித்த துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பெற்றோரின் கனவை மாணவர்களின் வாழ்க்கையில் திணிப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் திறமையைக் கண்டறிந்து அதனை வடிவமைப்பதற்கான திட்டத்தை நாங்கள் யோசித்து வருகிறோம். புதிய தொழில்நுட்ப உதவியோடு பாடத் திட்டங்களை மாற்றுவது, பாடத்தை சொல்லித் தருவது பற்றியும் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். வகுப்பறையில் குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதியுங்கள். மாணவர்களின் சந்தேகங்கள், ஐயங்கள், கருத்துகளையும் தெரிவிக்கக்கூடிய மக்களாட்சி தத்துவம் மிளிரக்கூடிய இடமாக வகுப்பறைகள் திகழ வேண்டும். அங்கு சர்வாதிகாரத்தின் நிழல்கூட படியக்கூடாது. குழந்தைகளின் தனித்திறமை யைக் கண்டுபிடித்து வளர்ப்பதும், பாதுகாப்பதும், மெருகேற்றுவதும், பட்டை தீட்டுவதும் பெற்றோருக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ அவ்வளவு பொறுப்பு பள்ளிக்கும், ஆசிரியருக்கும் உண்டு. பள்ளிக்கு வரும் குழந்தைகளை மனமகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் பள்ளிக் கல்வித்துறையின் அத்தனை செயல்பாடுகளும் இருக்கின்றன என்றார் உதயச்சந்திரன். இந்த விழாவில், சாவித்ரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப்பள்ளி குழுத் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான கே.சந்துரு, வி.கிருஷ்ணசாமி அய்யர் அறக்கட்டளை செயலர் காந்த், பள்ளி செயலர் டி.சுரேஷ், தலைமை ஆசிரியர் சொ.பொ.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.