பிரகாசமான எதிர்காலம் தரும் நுழைவுத் தேர்வுகள்


பிரகாசமான எதிர்காலம் தரும் நுழைவுத் தேர்வுகள்

| மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவு தேர்வான 'நீட்' ஏற்பாட்டின் தொடர்ச்சியாக, பொறியியல் படிப்புக்கும் நாடு தழுவிய நுழைவுத் தேர்வினை 2018-19 கல்வியாண்டு முதல் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான விதிகளை வரையறுக்குமாறு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (AICTE) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம், பொறியியல் அல்லாத அதேநேரம் அவற்றுக்கு நிகரான சில படிப்புகள் பல உள்ளன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றைப் படித்தால் பிரகாசமான எதிர்காலத்துக்கும் உத்திரவாதம் உண்டு. தகுதியும், ஆர்வமும் உடைய மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் வாயிலாக அவற்றில் சேர்ந்து படிக்கலாம். உலகளவில் வேலைக்கு உத்தரவாதம் தரும் படிப்புகளில் முக்கியமானவை ஃபேஷன் டெக்னாலஜி, ஃபேஷன் டிசைனிங். மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரிகள் டெல்லி, மும்பை, சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஃபேஷன் டிசைனிங், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்காகத் தனி நுழைவுத் தேர்வு வாயிலாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். பிப்ரவரியில் எழுத்துத்தேர்வு, தொடர்ந்து நேர்முகத்தேர்வு என, இரண்டு கட்டமாக நடத்தப்படும் தேர்வுகளின் இறுதி யாகத் தேர்வானவர்கள் மே மாதம் அறிவிக்கப் படுகிறார்கள். மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் டிசைன் நிறுவனம், பிளஸ் 2 முடித்தவர்களுக்காக இளநிலை டிசைனிங் பட்டப் படிப்பை வழங்குகிறது. இதற்காக National Entrance Examination for Design (NEED) என்ற பிரத்யேக நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. படைப்புத் திறனில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை இப்படிப்புகள் உறுதி செய்கின்றன. பெங்களூரில் செயல்படும் ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைன் நிறுவனம் (www.aifdonline.in), ராணுவத்தினர் வாரிசுகளுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை ஃபேஷன் மற்றும் டிசைனிங் துறைகளில் வழங்குகிறது. பிரத்யேக எழுத்துத் தேர்வு மூலம் இதற்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

காலணி மூலம் பணி

மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஃபுட்வேர் டிசைனிங் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஆனது பிளஸ் 2 முடித்தவர்களை நுழைவுத் தேர்வு வாயிலாகக் காலணி மற்றும் தோல் துறை சார்ந்த பல்வேறு பிரத்தியேகப் படிப்புகளில் சேர்த்துக்கொள்கிறது. சர்வதேசத் தரத்திலான இப்படிப்புகள் வேலைவாய்ப்பு உத்திரவாதம் உடையவை.

| ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு குறித்த சுட்டி: http://www.nift.ac.in/

| ஃபுட்வேர் டிசைனிங் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடி யூட்டுக்கான சுட்டி: http://www.fddiindia.com/

| மத்திய அரசின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் டிசைன் நிறுவனத்தின் சுட்டி: http://www.nid.edu/

| பெங்களூரில் செயல்படும் ஆர்மி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைன் நிறுவனத்தின் சுட்டி : www.aifdonline.in

சட்டப் படிப்புகள்

ஐந்து ஆண்டு பி..எல்.எல்.பி., படிப்புக்கான அகில இந்தியச் சட்ட நுழைவுத் தேர்வினை (http://nludelhi.ac.in/ailet2017.aspx) டெல்லி தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்

நடப்பாண்டு கிளாட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 31. ஆன்லைன் தேர்வு நாள் மே 14. பிரபலச் சிம்பியாசிஸ் பல்கலைக்கழகம் பல்வேறு நகரங்களில் உள்ள தனது சட்டப் பள்ளிகளில் பி..எல்.எல்.பி, பி.பி. .எல்.எல்.பி படிப்புகளின் சேர்க்கைக்காகத் தனி நுழைவுத் தேர்வினை நடத்துகிறது (http://www.set-test.org/).

பாதுகாப்பு படை அதிகாரியாக

நாட்டின் முப்படைகளில் சேர்ந்து தேசச் சேவையில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள், அவற்றுக்கான பிரத்தியேக நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். இவற்றுக்காக நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. நடத்துகிறது. முப்படைகளின் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பப் பொறியாளர்கள் இந்த அகாடமி மூலம் உருவாக்கப்படுகின்றனர்.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட்

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்காக ஜே... (Joint Entrance Exam - JEE) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை மத்தியச் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் கவுன்சில் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பும் இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றன (http://nchm.nic.in/). இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, 21 மத்திய நிறுவனங்கள், மாநில அரசுகளின் 14, தனியாரின் 15 கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கின்றன. 3 ஆண்டு பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிடி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டப் படிப்பும், ஒன்றரை ஆண்டுக்கான பல்வேறு பட்டயப் படிப்புகளையும் இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.