அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.


தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புக்கு ஐகோர்ட்டு தடை | அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த எம்.சரோஜினி, எஸ்.சுதா, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கே.சுந்தரி, கே.பிரேம்குமார் ஆகியோர் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தகுதி தேர்வு நாங்கள் 2010 மற்றும் 2011-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன்பாக அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோம். எங்களது பணி நியமனம் தகுதியின் அடிப்படையில் நடந்தது. இந்த நியமனத்துக்கு தமிழக கல்வித்துறை முறையான ஒப்புதலையும் அளித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம், கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களை தகுதி தேர்வின் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு23-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது.   இந்த புதிய சட்டத்தின்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 2011-ம் ஆண்டு விதிகளை உருவாக்கினார். பின்னர், 2011-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி அவர் பிறப்பித்த அரசாணையில், ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் இனி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது, 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தகுதி தேர்வு எழுத தேவையில்லை என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி, அக்டோபர் 4-ந்தேதி, 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி என்று 3 முறை ஆசிரியர் தகுதி தேர்வுகளை தமிழக அரசு நடத்தியது. அப்போது, 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதிக்கு பின்னர் ஆசிரியர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் இந்த தகுதி தேர்வு பொருந்தும், அதற்கு முன்பு நியமிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது. நாங்கள் 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்பே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், இந்த தகுதி தேர்வு எங்களுக்கு பொருந்தாது. இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த மார்ச் 1-ந்தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில், அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், வருகிற ஏப்ரல் 30-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறவேண்டும். இதுவே அவர்களுக்கு இறுதி வாய்ப்பு. ஒருவேளை இந்த தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை என்றால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்' என்று எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளார். ஆனால், நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்புக்கு முன்பே பணியில் சேர்ந்துள்ளதால், எங்களை தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்த முடியாது. எனவே, பள்ளிக்கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த மார்ச் 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு மீதான விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.