தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 2, 3-ந்தேதிகளில் நடைபெறும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு


தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 2, 3-ந்தேதிகளில் நடைபெறும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் 2 மற்றும் 3-ந்தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி கடந்த 6, 7, மற்றும் 8-ந்தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக அந்த தேதிகளில் நடைபெறவேண்டிய அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. மேலும் வார்தா புயல் கடந்த 12-ந்தேதி சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்து சென்றது. அப்போது ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த 14-ந்தேதி விடுமுறை விடப்பட்டது. அதனால் அன்று நடைபெறவேண்டிய அரையாண்டு தேர்வு அந்த 3 மாவட்டங்களிலும் நடைபெற வில்லை. இதையொட்டி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனவரி மாதம் 2, 3-ந்தேதிகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி கடந்த 7, 8-ந்தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் காரணமாக அந்த தேதிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. கடந்த 7-ந்தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் ஜனவரி 2-ந்தேதியும், டிசம்பர் 8-ந்தேதி தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் அடுத்த மாதம் ஜனவரி 3-ந்தேதியும் நடைபெறும். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வார்தா புயல் காரணமாக மாணவர்கள் நலன் கருதி டிசம்பர் 14-ந்தேதி விடுமுறை விடப்பட்டது. அன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் ஜனவரி 5-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.